சென்னை:

“ஓரளவுக்குதான் பொறுமையை  கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, எதிர்த்தரப்பினருக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இன்று தொ்டர்களிடையே அவர் பேசியதாவது:

“ஒன்னரை கோடி தொண்டர்களை அம்மா என்னிடம் விட்டுச்சென்றிருக்கிறார். இந்த கட்சியையும் இந்த ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. ஒன்னரை ஒரு சிலரின் ஆட்டங்கள் இங்கே நடக்கிறது. ஒன்னரை கோடி தொண்டர்கள்  இருக்கும்போது அந்த ஒரு சிலரின் ஆட்டங்கள் இங்கே ஒன்றும் செய்துவிட முடியாது.

எனக்கு எல்லாமே நீங்கள்தான். அம்மா… ஆட்சியையும் கட்சியையும் நான் பத்திரமாக பத்திரமாக காப்பாத்துவேன் என்றுதான் அம்மா உறுதியாக நினைத்து சென்றிருக்கிறர்.  தலைவருக்கு பிறகு அதிமுகவை அம்மா அவர்கள் பல சோதனைகளைத்தாண்டி கட்டிக்காத்தார்கள். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகம் இந்தியாவில்  மூன்றாவது கட்சி என்ற பெருமையை தேடிச்சென்றிருக்கிறார்கள்.

அம்மா இப்போ நம்மிடம்தான் இருக்கிறார். அவர், நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை அம்மா அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். அப்படியென்றேதான் இன்று நடக்கும் சூழல் நமக்கு தெரிகிறது.

ஒன்னரை கோடி தொண்டர்கள் நம்மிடம் இருக்கும் வரை நம்மளை பிரிச்சி ஆள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப்போவார்கள். நம் இயக்கம் அம்மா சொன்னது போல் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாரும் அசைக்க முடியாது.

அம்மாவும் நெறைய்ய போராட்டங்களை சந்தித்துதான் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார். இப்போது நமக்கும் அந்த சோதனை வந்திருக்கிறது. நாமும் வெல்வோம்..  நீங்கள் இத்தனை பேர் என்னுடன் துணை இருக்கும்போதும் நாங்கள்.. நான் அஞ்சப்போவதில்லை.

நாம் நியாயமாகவும் ஜனநாயகத்தோடும் நம்பிக்கை வைத்திருந்ததால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை  கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்..!” என்று சசிகலா பேசினார்.