கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

Must read

செங்கல்பட்டு:
திமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி சென்னை வந்துள்ளார். பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு அமமுகவினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் காரணமாக முதல்நாள் காலையில் புறப்பட்ட சசிகலா, மறுநாள் விடியற்காலையில் சென்னை வந்து சேர்ந்தார்.

சசிகலாவின் வருகை அதிமுகவுக்குள் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா அழுத்தமாக கூறியுள்ள நிலையில் விரைவில் செய்தியாளர்களையும் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை என்று அக்கட்சியின் இரட்டை தலைமை உள்பட மூத்த அமைச்சர் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், சசிகலாவின் அபிமானிகளும், இரட்டை தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்களும் சசிகலாவுடன் பேசி வருவதாக தெரிகிறது. எனவே, சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் யார்யாரெல்லாம் அவருடன் பேசுகிறார்கள் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க உளவுத்துறை பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த், சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடருமா அல்லது சசிகலா பக்கம் திரும்பி அமமுக கூட்டணியில் சேருமா என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு புதுப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி – சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடைபெறாது என்றும், அதிமுகவுக்கு சசிகலா தேவையில்லை என ஏற்கனவே ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

More articles

Latest article