சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும், அவர்மீது சந்தேகம் உள்ளது என மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சுமார் 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று அவர் தேறி வருவதாக கூறப்பட்ட நிலையில், திடீரென இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றி அரசுடமை ஆக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவரது வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது, என்றும் மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்துவேதா இல்லத்தின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.தீபா மற்றும் தீபக் இடம் நேற்று (10/12/2021) ஒப்படைத்தார். இதனையடுத்து.இருவரும் வேதா இல்லத்திற்கு வருகை தந்து கோட்டாச்சியர், வட்டாச்சியர் முன்னிலையில் உள்ளே சென்று வீட்டிற்குள் அனைத்து அறைகளையும் 3 மணி நேரமாக பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, “ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளதாகவும் ஆனால் இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை என கூறினார். இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை, ஆனால் இந்த வீட்டிற்கு பாரமரிப்பு பணிகள் நிறைய உள்ளது. அதை எல்லாம் செய்ய வேண்டும்.
அத்தை (ஜெயலலிதா) இருக்கும் போதே வந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோசம்பட்டு இருப்பேன். ஜெயலலிதா இல்லாமல் இந்த வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. முதற்கட்டமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தான் எங்கள் கடமை. அடுத்தகட்டமாக இங்கு என்னென்ன செய்யவேண்டிய சட்ட ரீதியானபணிகள் பாக்கியுள்ளன அதை செய்ய வேண்டும். இது என்னைக்கும் என்னோட அத்தை வீடுதான்.
அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு. அதை எல்லாம் மேற்கொண்டு அரசியல் பணி செய்யலாம். இது அறிவுரை இல்ல. பொதுக் கருத்து என கூறியவர், . ஜெயலலிதா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை. இந்த வீட்டை அரசுடமையாக்கினால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என்றவர், அதை விட்டுவிட்டு இதுதான் வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயார் என கூறினார்.
மேலும், இந்த வீட்டை பார்த்தாலே எனக்கு பல சந்தேகம் வருகிறது என்று கூறியவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும் என்றும், எனது அத்தை ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.