சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை! தள்ளுபடியாகுமா?

டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அன் கோவினர், உச்சநீதி மன்றத்தில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சீராய்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணையின்போது சசிகலாவின் மனு விசாரணைக்கு  உகந்ததா  அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரிய வரும்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், ஆகியோருக்கு  கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும்  விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறை யீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் அடங்கிய பெஞ்ச் கடந்த பிப்ரவரி 14ல் தீர்ப்பளித்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், பெங்களூர் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால்,  சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி,  மறு சீராய்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.இதை நீதிபதி அமித்வராய், நாரிமன் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது.
English Summary
Sasikala review petition today trial at Supreme court