தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாஜக மெம்பர் சசிகலா புஷ்பா வீடு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 திமுக கவுன்சிலர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, அவர்களை கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படத்தி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாலை குறித்து தரக்குறைவாக அமைச்சர் கீதா ஜீவன் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாஜக மாநில துணைத்தலைவராக உள்ள சசிகலா புஷ்பா அமைச்சர் கீதா ஜீவன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இதையடுத்து, சசிகலா புஷ்பா வீடு திமுக குண்டர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினல் வழக்கு பதிவு செய்ய தாமதப்படுத்தியதுடன், பாஜகவினர் போராட்டம் நடத்திய பிறகு, வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, டூவிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் (பெயர் குறிப்பிடப்பட வில்லை) மற்றும் கவுன்சிலர் ஒருவரின் கணவர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை. அவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்ட திமுகவினரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி, தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட பாஜகவினர் ஊர்வலமாகச் சென்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உட்பட 142 பேரை கைது செய்தனர்.
காவல்துறையினர் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூரிலேயே இருக்கும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாத காவல்துறை, போராட்டம் நடத்த சென்ற அப்பாவிகளை கைது செய்து, தங்களது வீரத்தை பறைசாற்றி வருகிறது என்று விமர்சித்துள்ளனர்.