சென்னை:
ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இறந்தார். அதிமுக புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் சென்று போயஸ் கார்டனில் சசிகலாவை அப்போது, பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சசிகலாவிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் அதற்கு சம்மதித்தார். பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து கட்சியின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சசிகலா இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர் அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். சசிகலாவுடன் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், தம்பிதுரை மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
படம்: நன்றி ஜெயா டிவி