நாளை கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவில், ஜெ.வின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்ப, அதிமுக முக்கிய புள்ளிகள், “சசிகலா பொ.செ. பொறுப்பு ஏற்கவேண்டும்” என பேட்டி, அறிக்கைகள் கொடுத்துவந்தனர்.
தமிழ்நாடு முழுதும் சசிகலாவின் ஆதரவாளர்கள், “சின்ன அம்மாவே தலைமையேற்க வாருங்கள்” என போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், “பொ.செ.வாக சசிகலா பொறுப்பேற்க போவதில்லை” என்று தகவல் உலவுகிறது.
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுவதாவது:
“சசிகலாதான் பொதுச்செயலராக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் தொண்டர்கள் இதை விரும்பவில்லை. அவர்கள் சசிகலாவின் போஸ்டர் களை கிழித்து வருகிறார்கள். தவிர, மத்திய அரசும், சசிகலா பொ.செ. ஆவதை விரும்பவில்லை.
இந்த நிலையில் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த சில இரண்டாம் கட்ட தலைவர்கள் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள், “நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது; மத்திய அரசும் நெருக்கடி கொடுக்கிறது. ஆகவே தற்போது நீங்கள் (சசிகலா) பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாம். கொஞ்ச காலம் பொறுத்து பிறகு பொ.செ. ஆகலாம்” என்று தெரிவித்தனர்.
மேலும், “நாளைய பொதுக்குழுவில் தற்காலிக ஏற்பாடாக வேறு ஒருவரை பொதுச்செயலராக ஆக்கலாம். ஜெயலலிதாவுக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வம் எப்படி தற்காலிக முதல்வராக இருந்தாரோ அது போல உங்கள் சார்பாக ஒருவர் பொ.செ. ஆக இருக்கட்டும். அவரும் உங்கள் குடும்பத்தவராக அல்லாமல் வேறு நபராக இருக்கட்டும்” என்றும் தெரிவித்தார்கள்.
இதையடுத்து சசிகலா குடும்பத்தினர் கூடிப்பேசினர். முடிவில், வேறு நபரை பொ.செ. ஆக்கலாம் என முடிவெடுத்தனர்” என்று அதிமுக வட்டாரத்தில் ஒரு தகவல் உலவுகிறது.
அதே நேரம், “சசிகலா நாளை பொ.செ.வாக பதவியேற்பதோடு, விரைவில் முதல்வராகவும் பதவியேற்பார்” என்று சிலர் சொல்லிவருவதும் நடக்கிறது.