மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம்  கூறியது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள்  சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக கட்சி சார்பில், வழங்கிய சுமார் பதிமூன்றரைக் கிலோ தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க ஆஃப் இந்தியாவிலுள்ள லாக்கரில் இருந்து எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த தங்கக்கவசத்தை, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வங்கியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு எடுக்கப்பட்ட தங்கக் கவசம் பசும்பொன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  ”மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கமாகவே இன்றளவும் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

அம்மா உணவகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாகவும், தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த உணவுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்து இருப்பதாகவும், தற்போது பொறுப்பிலுள்ள திமுக அரசு அதிமுக அரசு கொண்டு வந்த எந்தத் திட்டங்களையும், நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். தற்போது அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறியவர்,  சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.

ஓபிஎஸ்-ன் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் சசிகலா வலையில் ஓபிஎஸ் சிக்கிவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

என்னப்பா புரட்சி செய்தார் சசிகலா?

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல் மற்றும் இரட்டை தலைமைக்குள் ஒற்றுமை இல்லாததே என்ற கருத்து அதிமுக தொண்டர்களிடையே நிலவி வருகிறது. மேலும், அரசியல் விமச்கர்கள் கூறுவது போல, அதிமுகவில் கொங்கு மண்டலம், மதுரை மண்டலம் என இரு பிரிவுகளாக, ஜாதிய ரீதியிலும் பிரிந்து கிடக்கிறது. இதனால், கட்சியை கைப்பற்றுவதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாகவும், அதன் காரணமாகவே சட்டமன்ற தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக தென்மாவட்ட தோல்விக்கு ஒபிஎஸ் மீது வசைமாரி பொழியப்பட்டது. கொங்கு மண்டல அதிமுக வெற்றிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்றும் புகழப்பட்டது. இதனால்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும், ஓபிஎஸ்-சால் கைப்பற்ற முடியாமல், எடப்பாடி வசம் சென்றது.

இந்த நிலையில்தான் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும், திமுக ஆட்சியையும், கலைஞர் ஆட்சியையும் ஓபிஎஸ் புகழ்ந்ததும், அதிமுகவுக்கும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அடுத்தடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருவதும், திமுக அரசுமீது ஓபிஎஸ் காண்பிக்கும் மென்மையான போக்கும் அதிமுகவினரிடையே அதிருப்தியை உருவாகி உள்ளது.

சசிகலா, ஓபிஎஸ் இருவரும் ஜாதிய ரிதியிலாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சசிகலாவால் மிரட்டப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவிடமே சரணடைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக மேலிடத்தில் இருந்து சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற ஓபிஎஸ், இபிஎஸ் வசம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஓபிஎஸ் தரப்பில் திட்டவட்டமான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது ஜாதி ரீதியிலான பாசம் என்று விமர்சிக்கப்படுகிறது.

அதிமுக முழுமையாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையின்கீழ் செயல்பட்டு வந்தாலும்,   சசிகலா இன்னும் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டும், அதிமுக கொடி கட்சி காரில்தான் பயணம் செய்து வருகிறார். கட்சி கொடி ஏற்றியும், கல்வெட்டுக்களையும் திறந்து வைத்து வருகிறார். இதற்கு உத்தட்டளவில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், சசிகலா அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதிலும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்சின் 2வது மகன் சசிகலா விரைவில் குணமடைய பிரார்த்தப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க நாளில், சசிகலா எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியபோது, அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட சசிகலா ஆதரவாளர்களும், அதிமுக சசிகலா தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், தேவர் குருபூஜையை முன்னிட்டு, இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,   சசிகலாவை கட்சியில் மீண்டும் இணைப்பது குறித்து  தலைமை கழகம் முடிவெடுக்கும் என கூறியிருப்பது சகிலா அதிமுகவுக்குள் வருவது  உறுதி என தெரிகிறது.

சசிகலா கொடுமையால் தற்கொலை செய்ய முயன்றேன்! ஓபிஎஸ் பகீர் தகவல்

ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலாவால்,  முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், ஜெ.சமாதிக்கு சென்று தியானம் செய்து, அதிமுகவை  இரண்டாக உடைத்தவர். அப்போது, சகிகலா தனக்கு சசிகலா கொடுமை காரணமாக தற்செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், வேறு யாராவது எனது இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஜெயலலிதாவுக்கு துரோக செயல்களை செய்தவர் சசிகலா என்றும்,  அதனால்தான், கடந்த  2014-ம் ஆண்டில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார் என்றும் கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ், தற்போது,  அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம் என வியாக்கியானம் பேசி வருகிறார்.
கடந்தவாரம் கவர்னரை சந்தித்து திமுக அரசு குறித்து புகார் மனு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூத்த தலைவர்கள் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய  எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதுவது, கல்வெட்டில் தன்னைக் கட்சியின் பொதுச்செயலர் என்று குறிப்பிடுவது குறித்து காட்டமாக விமர்சித்தார். அவர்  எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுபற்றி எங்களுக்கு என்ன?  நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் நாங்கள்தான் அதிமுக என்று சொல்லிவிட்டது என்று கூறியதுடன்,  உண்மையான அதிமுக நாங்கள்தான், சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை. அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கெனவே காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அப்போது செய்தியாளர்கள், சசிகலா  மறப்போம், மன்னிப்போம் என்கூ கூறியிருக்கிறாரே என்று அடுத்த கேள்வியை வீச, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஏற்கெனவே பலமுறை தெரிவித்துவிட்டோம் என்று கடுப்பாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஓபிஎஸ், எடப்பாடியின் கருத்துக்கு மாறாக,  சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் எனவும் கூறியுள்ளார். ஓபிஎஸ்-ன் சமீப கால நடவடிக்கைள், அவர் சசிகலா பக்கம் சாய்வதையே உறுதி செய்து வருகிறது. இதற்கு ஜாதிய பாசம் என்றும் கூறப்படுகிறது.  இதனால் அதிமுக விரைவில் மீண்டும் இரண்டாக உடையும் வாய்ப்பு உருவாகும் சூழல் உருவாகி வருகிறது.
அதிமுகவை முழுமையாக சசிகலா கைப்பற்றும் காலம் விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே அதிகரித்து வருகிறது.

அதே வேளையில், அதிமுக முதுகில் ஏறி பயணம் செய்து வரும் பாஜகவும், தமிழ்நாட்டில்  தனது கட்சியின்  வளர்ச்சிக்கு மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை  மனதில் வைத்துக்கொண்டு, அதற்கான ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  சசிகலா எடப்பாடி ஓபிஎஸ் அமமுக கட்சிகளை ஒன்றிணைத்து, அதிமுகவை மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக மாற்றி, அதைக்கொண்டு தமிழ்நாட்டில் காரியம் சாதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கமலாய வட்டார தகவல்கள் கூறுகின்றன.

தமிழக அரசியல் களத்தில் சசிகலா மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நேரம் பரபரப்பையும், சலசலப்பையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது.

சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகன்: கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குமா..?