சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்றிரவு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம்  பிறகு செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

“ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  இருந்தபோது அவரது உடல் நிலை மிகவும் மோசமான  நிலையில் அவர்கள் (சசிகலா) என்னிடம் வந்து பேசினார்கள்.   “ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. கட்சியையும்  ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நக்கு இருக்கிறது. ஆகவே நீங்கள் முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றார்கள்.

நான், “அம்மா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது ஏன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றேன். அதற்கு அவர்கள், “அசாதாரணமான சூழல்  ஏற்பட்டால் தகுந்த முடிவு எடுக்க வேண்டும்” என்றார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு, அம்மாவை நினைத்து அழுது புலம்பினேன்.

அப்போது அவர்கள், கழக பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.  நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா)  இருந்தபோது இரு முறை.. இக்கட்டான சூழலில் என்னை முதல்வராக்கினார்கள். மீண்டும் சூழல் சரியான பிறகு, அம்மா அவர்களிடம் முதல்வர் பதவியை கொடுத்தபோது, மிகவும் மகிழ்ந்தேன்.

ஆனால் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நான் முதல்வராக விரும்பவில்லை. ஆகவே, “தொண்டர்கள், மக்கள் ஏற்கும்  வேறு ஒருவரை முதல்வராக்குங்கள் “ என்றேன். அதற்கு அவர்கள், “நீங்கள்தான் முதல்வராக வேண்டும். அம்மா, இருமுறை உங்களைத்தான் முதல்வாராக்கி இருக்கிறார்கள். வேறு யாரையாவது முதல்வர் ஆக்கினால்  விமர்சனங்கள் வரும்” என்றார்கள்.

ஆகவே நம்மால் கட்சி ஆட்சிக்கு பங்கம் கூடாது என முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

முதல்வராக பதவி ஏற்ற சில தினங்களில் என்னை மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் சந்தித்தார். அப்போது, “சசிகலாவின் சகோதரர் திவாகரன், நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாகி விட்டீர்கள். இனி  அக்கா சசிகலா  என்ன செய்வார். அவர் இனி சென்னையில் இருக்க வேணடாம் ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்கிகிறார்” என கூறினார்.

“என்ன செய்வது” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்றார்.

இது குறித்து நான் கட்சியின் மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதை அனைவரும் சின்னம்மாவிடம் சொன்னோம். அவரும் ஏற்றுக்கொண்டார்.  பொதுக்குழு கூடி, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியது.

அப்போதுதான் வர்தா புயல் வந்தது. அந்த நேரத்தில், நான் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்றினோம்.  சீரமைப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்தோம். அதனால் அம்மாவின் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதை நான் எனக்காக செய்யவில்லை. அம்மாவின் ஆட்சிக்காக செய்தேன். ஆனால் இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது” என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

சசிகலா மீது ஓ.பி.எஸ். பகிரங்கமாகக் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பி.எஸ். அளித்த பேட்டியின் தொடர்ச்சி அடுத்த செய்தியில்.