சென்னை: அதிமுக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று  பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர் களை சசிகலாவால் நீக்க முடியும் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இருந்வர் பெங்களூரு அதிமுக செயலாளர் புகழேந்தி. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர்.  தொடர்ந்து டிடிவி தினரகன் கட்சியில் சேர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எதிராக பேசிவந்தார். பின்னர் டிடிவியுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். ஆனால், அங்கும் கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால்,அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதையடுத்து மீண்டும் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து அதிமுக இரட்டை தலைமைக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் சசிகலாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று புதியதாக ஒரு கருத்தை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களை சசிகலா நீக்க முடியும். அதிமுகவில் செயல்படாத நிர்வாகிகளை நீக்க சசிகலாவுக்கும் உரிமை உண்டு என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சசிகலா ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சசிகலா தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என கூறி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பெங்களூரு புகழேந்தி மேலும் குழப்பத்தை உருவாக்கி வருகிறார்.