இன்னும் பத்து நாட்களில் முதல்வர் பொறுப்பேற்கிறார் சசிகலா?!

Must read

நியூஸ்பாண்ட்

நியூஸ்பாண்ட், வாட்ஸ்அப்பில் அனுப்பிய கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே, அதிர்ச்சியாகி அவருக்கு போன் போட்டோம்.

எடுத்தவுடனேயே, “தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிவிட்டீர்.. அதானே!  அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பேற்பார் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதியே பொறுப்பேற்பார் என்று நான்தானே சொன்னேன். அதுதானே நடந்தது” என்றவர், “அதற்காக என்னை நான் பெருமையாகச் சொல்லவில்லை. அன்றைய நடப்பை நான் சொல்கிறேன். அதில் மாற்றமில்லாத போது அப்படியே நடந்துவிடுகிறது” என்று தன்னடக்கத்தையும் குழைத்துக் கொடுத்தார்.

அப்புறம் என்ன…

நியூஸ்பாண்ட் அனுப்பிய கட்டுரை… கீழே:

முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். ­­அதன் பிறகு, முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். அதே நேரம், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பொ.செ. ஆவதற்கான முயற்சியில் சசிகலா ஈடுபட்டார். அவரே பொ.செ. பதவியேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. அமைச்சர்களும், இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதே கோரிக்கையை வைத்தார்.

சசிகலா

இதற்கிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் கருத்துவேற்றுமை நிலவுவதாக ஒரு செய்தி உலாவந்தது. மேலும், மத்தியில் ஆளும் பாஜக, இங்கே அதிமுகை ஆட்டிப்படைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பொதுக்குழு, செயற்குழுவின் முழு ஒப்புதலோடு கடந்த டிசம்பர் 31ம் தேதி சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

அதே நேரம், கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள், சசிகலா பொறுப்புக்கு வருவதை விரும்பவில்லை என்கிற பேச்சும் எழுந்தது. இதை உறுதி செய்வது போல, தமிழகம் எங்கும், சசிகலா போஸ்டர்கள் தொண்டர்களால் கிழிக்கப்பட்டன. சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களை வாட்ஸ்அப்  உட்பட சமூகவலைதளங்களில் அதிகமுக தொண்டர்கள் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. சசிகலா, பொதுச்செயலாளர் ஆகக்கூடாது” என ஊடகங்களில் தெரிவித்து வந்தார்.

மேலும், “ஜெயலலிதா வசித்த போயஸ் இல்ல வீடு, எனது பாட்டிக்குச் சொந்தமானது. அந்த வீட்டைவிட்டு சசிகலா வெளியேற வேண்டும்” என்றும் குரல் கொடுத்துவருகிறார். இதற்கான சட்டப்போரட்டத்தில் ஈடுபடவும் தீர்மானித்திருக்கிறார்.

தீபா

இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, வேறொரு திட்டத்தை முன்னெடுப்பதாக ஒரு செய்தி உலாவருகிறது. அதாவது, “சொத்துக்குிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி. அவர் சிறை சென்று விடுவார். அதற்குள், ஜெயலலிதாவின் போயஸ் இல்ல வீடு தொடர்பான தீபாவின் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரவேண்டும். அவரை  போயஸ் இல்லத்தில் குடியேற்ற வேண்டும். இதனால் தொண்டர்கள் மத்தியில் அவருக்கு மேலும் செல்வாக்கு அதிகரிக்கும்.

இறுதியில், ஆட்சிக்கு ஓ.பி.எஸ்.,  கட்சிக்கு தீபா. இருவரும் பாஜக கட்டுப்பாட்டில்” என்பதுதான் பாஜக திட்டம்.

இந்தநிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (ஜனவரி 2)  திடீரென முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, தலைமைச் செயலகத்தில்  சந்தித்துப் பேசினார். (ஓ.பி.எஸ் முதல்வராக பதவியேற்ற பின், பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடக்கும் முதல் சந்திப்பு  இது.)

குளச்சல் துறைமுகம், தமிழக சாலைப் பணிகள் ஆகியவை குறித்து  இருவரும் பேசியதாக  சொல்லப்படுகிறது.

ஆனால்  பாஜகவின், “தீபா – ஓ.பி.எஸ்.” திட்டம் குறித்தே இந்த ஆலோசனை என்று சசிகலா தரப்பு எண்ணுகிறது.

இந்த நிலையில்தான் சசிகலா தரப்பு அதிரடி முடிவெடுத்துள்ளது.  கொஞ்ச காலம் கழித்து சசிகலா முதல்வராகலாம் என திட்டமிட் அவர் தரப்பு, தற்போது “இன்னும் பத்து நாட்களுக்குள் சசிகலா முதல்வராக வேண்டும்” என்று முடிவெடுத்துள்ளது.

ஓ.பி.எஸ். – பொன்.ரா. கோட்டையில் சந்திப்பு

வரும் ஜனவரி 12ம் தேதி பவுர்ணமி. அதற்கும் வளர்பிறையில் முதல்வராக சசிகலா பதவி ஏற்றுவிட வேண்டும் என்பதே சசிகலா தரப்பின் திட்டம்..

அதே நேரம் சசிகலா மீது முக்கிய அஸ்திரத்தை ஏவ மத்திய பாஜக தயாராகி வருகிறது.

அதாவது ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான காலியிடங்களை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு (ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு) விற்பனை செய்ததது. இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் சசிகலாவுக்கு தொடர்பிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள வெளியாகின. ஆகவே இந்த வழக்கை முன்வைத்து சசிகலாவை கைது செய்யும் படலும் அரங்கேறலாம் என்று ஒரு தகவல் கசிகிறது.

ஆக தமிழக அரசியல் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article