சென்னை:
கடந்த வாரம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த சமக தலைவர் சரத்குமார், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு, அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அடுத்த மாதம் 18ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வருகை தந்தார். அங்கு எடப்பாடியை சந்தித்து பேசிய பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் பாராளு மன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறினார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்’ என்றும் விளக்கம் அளித்தார்.
இதே சரத்குமார் கடந்த 8ந்தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம் என்றும், நாங்களே தனித்து போட்டியிடும்போது, மிகப் பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.