சென்னை:
‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சந்தானம் நேரில் ஆஜராகவேண்டும் என்று சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன். இவர், சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
“எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவரை நியமித்தேன். ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுத்தேன்.
இந்த படத்தின் கதை விவாதம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு ஆனது. இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. மொத்தமாக இந்த படத்துக்காக இதுவரை ரூ.81 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்.
இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த மார்ச் 12-ந் தேதி பதிவு செய்திருக்கிறேன்.
ஆனால், இந்த படத்துக்கான படப்பிடிப்புக்குச் செல்ல இயக்குனர் ராம்பாலா முன்வரவில்லை. இதற்கு எந்த ஒரு சரியான காரணங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதனால் இந்த படத்துக்காக இயக்குனர் ராம்பாலாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். இதுகுறித்து அவருக்கும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் நோட்டீசு மூலம் தகவல் அளித்தேன்.
இந்த நிலையில், இயக்குனர் ராம்பாலா நடிகர் சந்தானத்தை வைத்து என்னுடைய ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் எடுத்துள்ளார்.
இதுகுறித்து மீண்டும் சந்தானத்திடம் கேட்டபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்’ என்று கூறியது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, சந்தானமும், ராம்பாலாவும் இதுவரை வரவில்லை.
இந்த நிலையில், அவர்கள் தங்களது பணம் பலத்தினால், இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு 14-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி கணபதிசாமி (பொறுப்பு) முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக வருகிற 28-ந் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.