ஜெய்ப்பூர்

த்மாவத் இந்தித் திரைப்படத்தைக் காண கிரந்தி சேனா உள்ளிட்ட அனைத்து ராஜபுத்திர இயக்கங்களுக்கும் அந்த படத்தின் இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் பத்மாவத் திரைப்படத்தை எந்த மாநிலமும் தடை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.   மேலும் அந்த திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்கவும் மறுத்துள்ளது.    வரும் 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் இந்தப் படத்துக்கு கிரந்தி சேனா உள்ளிட்ட பல ராஜபுத்திர அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்நிலையில் கிரந்தி சேனா உள்ளிட்ட அனைத்து ராஜபுத்திர அமைப்புகளுக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண வருமாறு இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி அழைப்பு விடுத்துள்ளார்.    அவர் தனது அழைப்புக் கடிதத்தில், “இந்தத் திரைப்படம் அரசி பத்மாவதிக்கு எந்த ஒரு அவப்பெயரோ அல்லது களங்கமோ ஏற்படுத்தாது.    இந்தப் படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கனவுக் காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தியே ஆகும்.  அனைத்து அமைப்புக்களுக்கும் கடிதம் மூலம் ஏற்கனவே இது குறித்து விளக்கம் அளித்துள்ளோம்.    அனைத்து ராஜபுத்திரர்களும் இந்த படத்தை பார்த்தால் தடை செய்யுமாறு கோர மாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு கிரந்தி சேனா தலைவர் கால்வி, “நாங்கள் இந்தத் திரைப்படத்தை எங்களுக்கு காட்ட வேண்டும் என கூறவில்லை.   இது சில சரித்திர ஆய்வாளர்களுக்கு காட்டப்பட்டு அவர்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று தான் சொனோம்.   ஆனால் இயக்குனர் எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு அதன் நகலை திரையரங்குகளில் வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.  நாங்கள் இந்தத் திரைப்படம் வெளிவருவதை அனுமதிக்க மாட்டோம்.    இதில் பிரதமர் மோடி தலையிட்டு இந்த படத்தை உடனடியாக தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப் போகிறோம்”  எனத் தெரிவித்துள்ளார்.