சென்னை: தமிழகம் முழுவதும் ஆறுகளின் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மணல்கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் தமிழகஅரசு,  காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும், சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்து உள்ளது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் தடுக்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்திவிடும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசுக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.  தமிழ்நாட்டில் தற்போது 25-க்கும் கூடுதலான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு அதிகாரப்பூர்வமாக 13 ஆயிரம் சரக்குந்து லோடு ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இவை தவிர்த்து எந்தக் கணக்கிலும் வராமல் பெருமளவில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.

ஆனால், இவை போதுமானவையாக இல்லை என்று கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியைக் கொண்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளவும் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத் துறை கடந்த 6 மாதங்களில் விண்ணப்பம் செய்துள்ளது.

இதற்க கடும் கண்டனம் தெரிவித்திருந்த அன்புமணி ராமதாஸ், புதிய மணல் குவாரிகளை திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தற்போது தலைவிரித்தாடும் மண்கொள்ளை குறித்து தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாப்பதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பெருகி வரும் மணல் கொள்ளையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்கு பெருங்கேட்டை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட நாளிலிருந்து மணல் கொள்ளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளைக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியதன் பயனாகவும், உயர்நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட தடை காரணமாகவும் தமிழகத்தில் மணல் கொள்ளை குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர் போராட்டங்களின் பயனாக தமிழகத்தில் பெரும்பான்மையான மணல் குவாரிகள் கடந்த ஆண்டுகளில் மூடப்பட்டுவிட்டன.

ஆனால், தமிழகத்தின் தற்போதைய அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 16 சரக்குந்து மணல் குவாரிகள், 21 மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றையும் சேர்த்து 25-க்கும் மேற்பட்ட சரக்குந்து மணல் குவாரிகளும், 30&க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அவற்றையும் சரக்குந்து குவாரிகளாக மாற்றவும், 9 புதிய சரக்குந்து மணல் குவாரிகளை திறக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இவற்றைத் தவிர சட்டவிரோதமாகவும் ஏராளமான மணல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலிருந்து எல்லையில்லாமல் மணல் கொள்ளையடிக்கப்படுவது தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வட மாவட்டங்களில் வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், காவிரி டெல்டாவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, கொங்கு மண்டலத்தில் கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் இருந்து எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசின் பிற துறைகளும் கண்டு கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கின்றன.

ஒரு குவாரியில் ஒரு நாளைக்கு 80 லாரி லோடுகள் மட்டும் தான் மணல் அள்ளப்பட வேண்டும்; ஒரு நாளைக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குவாரிகள் செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால், சட்டப்படியான மணல் குவாரிகள், சட்டவிரோத மணல் குவாரிகள் என அனைத்துக் குவாரிகளிலும் 24 மணி நேரமும் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரத்திற்கு 134 சரக்குந்துகள் வீதம் ஒரு நாளைக்கு 3200க்கும் கூடுதலான சரக்குந்துகளில் மணல் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்குக்கும் அதிகம்.

அதேபோல், மணல் குவாரிகளில் அதிகபட்சமாக ஒரு மீட்டர், அதாவது 3.33 அடி ஆழத்திற்கு மட்டும் தான் மணல் அள்ளப்பட வேண்டும். ஆனால், பெரும்பான்மையான மணல் குவாரிகளில் 5 மீட்டர் முதல் 7 மீட்டர், அதாவது 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுகிறது. 6 சக்கர சரக்குந்துகளில் 2 யூனிட்டுகளும், 10 சக்கர சரக்குந்துகளில் 3 யூனிட்டுகளும் மட்டும் தான் மணல் ஏற்றப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட இரு மடங்குக்கும் கூடுதலான அளவு மணல் ஏற்றப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு ரூ.1050 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மணல் குவாரிகளை கையாளும் தனியார் நிறுவனங்கள் 4 யூனிட் மணலுக்கு ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வசூலிக்கின்றன. அள்ளப்படும் மணல் பெருமளவில் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.

அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோதமாகவும் மணல் கொள்ளையடிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு நீளமானவையாகும். மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலை ஒட்டிய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதன் பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசே நினைத்தாலும் தடுக்க முடியாது.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆற்று மணலுக்கு ஏராளமான மாற்றுகளும் வந்து விட்டன. தமிழ்நாடு அரசும் நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், எந்தெந்த வழிகளில் முடியுமோ, அந்தந்த வழிகளில் சுற்றுச்சூழலை நாம் காக்க வேண்டும். மாறாக, மணல் அள்ளுவதை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை சீரழிக்க வழி வகுக்கக்கூடாது. எனவே, தமிழகத்தைக் காக்க அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மூட அரசு ஆணையிடுமாறு வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.