டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல்குவாரிகளை அரசு நடத்துவதாக கூறி வரும் நிலையில், அதை ஒப்பந்ததாரர்களுக்கு கைமாற்றி வருமானம் ஈட்டி வருகிறது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதையடுத்து,  மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து தமிழகஅரசு தொடர்ந்த வழக்கில்,   வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் கடந்த விசாரணை களின் போது, காரசார வாதங்கள் நடைபெற்றன.  அதைத்தொடர்ந்து, சட்டவிரோத மணல் விற்பனை வழக்கின் விசாரணையில் அமலாக்க துறைக்கு ஒத்துழைப்பு அளிக்காத தமிழக அரசின் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு (PMLA) மாநில அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள் என்று கடந்த விசாரணையின்போது உத்தரவிட்ட நிலையில், தற்போது, அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக வும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை இது தொடர்பாக  பல்வேறு சோதனைகள் நடத்தி, பல ஆவணங்களை பறிமுதல் செய்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இதை ரத்து செய்ய கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும், அவர்கள் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை  பிப்ரவரி 26ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் பட்சத்தில், அவர்கள் ஆஜராக வேண்டும் என கடந்த முறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி மார்ச் 1ம் தேதி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் மதித்திருக்க வேண்டாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர்களிடம் தரவுகள் இல்லாத போது ஆஜராவதில் பயனில்லை என்று வாதிட்ட தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த சம்மனை சற்று தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் 25ம் தேதி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்களின் பிரதிநிதிகள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.