பூரி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்  வடிவமைத்து கவுரவித்துள்ளார் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கியது. இந்த பெண்களின் புரட்சி காரணமாக,   அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்று கூறப்படுகிறது. ஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் கிரிகோரியன் காலண்டரின்படி மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை’ என்ற கருப்பொருள் முன்மொழியப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். ‘சார்புகளை உடை’ (Break the bias) என்ற தலைப்பின் கீழ் மனாசும் அவரது குழுவினரும் சேர்ந்து 15 அடி அகலமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். 15 டன் மணலைக் கொண்டு 7 மணி நேரம் வேலை செய்து இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த தலைமுறையில் பெண்கள் பல்வேறு துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர். எந்த துறையிலும் பெண்கள் பின்தங்கவில்லை. அவர்களை கவுரவிக்கும் வகையிலேயே மணல் சிற்பம் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.