சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொச்சி மெட்ரோ ரயில்  நிறுவனம் இன்று முழுவதும் பெண்கள்  இலவச பயணம் செய்யலாம் என அறிவித்து உள்ளது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8ந்தேதி) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நிறுவனங்கள், பல்வேறு சலுகைகள், அறிவிப்புகள் வெளியிட்டு பெண்களை கவர்ந்து வருகின்றன.

இந்த நிலையில்,  இன்று  அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக கொச்சி மெட்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  கொச்சி மெட்ரோ ரெயில் லிமிடெட்  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலக பெண்கள் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும், அத்துடன்,  இன்று முழுவதும்  பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்திற்கும் இலவசமாக ஏறி இறங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய தினம்  10 முக்கிய மெட்ரோ நிலையங்களில் பெண் ஊழியர்கள் மட்டுமே நிலையக் கட்டுப்பாட்டாளர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. அத்துடன்,  கொச்சி மெட்ரோவின் பல்வேறு நிலையங்களில் கவர்ச்சிகரமான போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது