சேலம்: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட மேலாளர் அறிவித்து உள்ளார். அதுபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருத்தாச்சலம் ரெயில் மார்க்கம் சின்னசேலம்- புக்கிரவாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி விருத்தாச்சலம்- சேலம் பாசஞ்சர் ரெயில் (06121), சேலம்- விருத்தாச்சலம் பாசஞ்சர் ரெயில் (06896) ஆகிய ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. காரைக்கால் – பெங்களூரு ரெயில் (16530) இயக்கத்தில் நாளை 1½ மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபேல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நரெிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் – சென்னை சென்டிரல் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதாவது எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இவ்வாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,