சென்னை:
ரடங்கு நேரத்திலும் சேலம் டு சென்னை 250 கி.மீ. தூரம் முதல்வருக்காக 20 அடிக்கு ஒருவர் வீதம் பந்தோபஸ்து பணியில் காவலர்கள் பணியமர்த்தி உள்ள தமிழக முதல்வரின் அதிகாரப் போக்கையும், காவலர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதையும் திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது,
சாத்தான்குளத்திலிருந்து மதுரை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தோம். சேலம் சாலை யிலிருந்து சென்னைவரை சுமார் 250 கி.மீட்டருக்கும் மேல் இருபது அடிக்கு ஒருவரென கொளுத்தும் வெயிலில் ஆண், பெண் காவலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஊரடங்கு பணியோ என நினைத்தபடி காவலர்களிடம் விசாரித்தேன். ‘சேலம் டு சென்னை செல்லும் @CMOTamilNadu அவர்களுக்கான பந்தோபஸ்து’ என்றனர். முதல்வருக்கு பாதுகாப்பு அவசியமே.
ஆனால் ஊரடங்கில் அனைவரும் வீடடங்கியுள்ள சூழலில் முதல்வரை யாரிடமிருந்து பாதுகாக்க இந்த பந்தோபஸ்து?
காவலர்கள் சுழற்சிமுறையில் பணிசெய்யும் பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?
சமீபகாலமாக அதிகரித்து வரும் போலீசாரின் வன்முறைக்கு இதுபோன்ற பணிச்சூழலும் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
காவலர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வகையில் மணிக்கணக்கில் வேலையின்றி ஒரேயிடத்தில் நிற்கவைக்கப்படுவதை முதல்வர் அவர்கள் தவிர்க்கலாமே.
இவ்வாறு வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.