கோவிலில் ஆதரவின்றி விடப்பட்ட பத்து நாள் பெண் குழந்தை

பிளாஸ்டிக் கூடையில் வைத்து கோவிலில் அனாதையாக விட்டுச்செல்லப்பட்ட பத்து தினங்களேயான பெண் சிசுவை மீட்டு  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஸ்டேஷனுக்கு உட்பட்டது கொட்டையூர் ஊராட்சிய கிராமம் நரசமங்கலம்.  இங்குள்ள கோவிலில் திடீரென ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு அனைவரும் பதறி அடித்துத் தேடிய போது, அங்கே அனாதையாகக் கிடந்த ஒரு பிளாஸ்டிக் கூடையில் இருந்து சத்தம் வந்ததைக் கண்டனர்.  அந்த கூடையில் 10 நாட்கள் ஆன பெண் குழந்தை தான் கதறி அழுதபடியே இருந்தது.

இதை பார்த்ததும் பதறி போன பொதுமக்கள் உடனே வட்டாட்சியர் விஜயகுமாரிக்கு தகவல் அளிக்க, அவர் விரைந்து வந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் உடனடியாக குழந்தையை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பச்சிளங்குழந்தை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது ஆரோக்யமாகவே இருந்தாலும், வழக்குப்பதிவு செய்த  மப்பேடு போலீசார் குழந்தையை கோயிலில் வீசிவிட்டுச் சென்ற பெண் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா