சேலம்:

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி தொகுதி எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சென்னை டூ சேலம்  8 வழிச்சாலையானது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களின் வழியாக அமைய உள்ளது.   இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, தமிழகஅரசு நிலம் கையகப்படுத்தியது. சுற்றுச்சூழலை அழிக்கும், 8 வழிச் சாலைத் திட்டத்தை  ரத்து செய்து கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் 8ந்தேதி சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கின் கடந்த விசாரணையின்போது, 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற மத்தியஅரசு சார்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்டு 6ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி தொகுதி எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் போராடி வரும் நிலையில் எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.