சேலம் மாவட்டம், கரடிப்பட்டி, அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயம்.
தல சிறப்பு:
இங்குள்ள அஷ்டலெட்சுமிகளின் பளிங்குச் சிலைகள். இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு வரப்பட்டடையாகும்.
பொது தகவல்:
கோயிலுக்கு வெளியே திருக்கோடி எனப்படும் தீபக்கம்பம், நுழைவுவாயிலில் இருபுறமும் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட யானைகள், கோயில் முகப்பில் மேல் மட்டத்தல் கீதாபதேச காட்சி புடைப்புச் சிற்பமாக! செவ்வக வடிவிலான மகா மண்டபத்தில் சுற்றிலுமாக தனித்தனி சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்டலட்சுமிகளின் பளிங்குச் சிலைகள், இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு வரப்பட்டவை என்கிறார்கள்.
தலபெருமை:
தனலட்சுமி கிழக்கு நோக்கி, தான்யலட்சுமி மேற்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதி லட்சுமி வடக்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதிலட்சுமி வடக்கு நோக்கி அமைந்துள்ளனர். வடமேற்கு மூலை நோக்கி ஐஸ்வர்ய லட்சுமியும், வடகிழக்கு மூலை பார்த்து விஜயலட்சுமியும், தென்கிழக்கு மூலை நோக்கி வீரலட்சுமியும், தென்மேற்கு மூலை பார்த்து சந்தானலட்சுமியும் அமைந்துள்ளனர். அனைவரையும் ஈர்க்கும் விதமாக கண்ணாடிக் கதவுகளடங்கிய தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.
கருவறையின் தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி. முன்புறம் சக்கரத்தாழ்வாரும். பின்புறம் யோக நரசிம்மரும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு மூலையில் விநாயகர் தும்பிக்கையாழ்வாராக சங்கு சக்கரம் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார். பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஐயப்பன் சன்னிதி. உள்ளே, பளிங்குச் சிலையாக சுவாமி ஐயப்பன்.
இருபுறமும் துவார பாலகர்கள் நின்றிருக்க அமைந்துள்ள கருவறை, லட்சுமி நாராயணப் பெருமாள் தேவியை தன் மடியில் அமர்த்தியபடி பக்தர்களுக்கு காட்சி அருள்கிறார். ஒரே சன்னிதியில் லட்சுமி நாராயணராக இங்கு காட்சியளிப்பது தனிச் சிறப்பு. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக பல தடங்கல்களையும் தாண்டி, கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் மிகக் கம்பீரமாக எழுந்துள்ளது பெருமாள் கோயில்.
தல வரலாறு:
சுமார் நானூறு வருடங்கள் பழமையான சிறு கோயிலை, சற்றே விரிவுபடுத்தி பத்து வருடங்களுக்கும் மேலாகப் பாடுபட்டு பளபளவெனக் கட்டியுள்ளனர் கிராமத்தினர். 2001 ல் துவங்கப்பட்ட திருப்பணிகள் 2013 ல் நிறைவுபெற்று, சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெற்று முழுமையான பின்னர் தூரத்திலிருந்து கோயிலைப் பார்த்தால் எல்லோர்க்கும் ஆச்சர்யம். நம் கிராமத்து ஜனங்கள் கட்டிய கோயிலா இது என்று! அத்தனை பிரமாதமாக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது கோயில். இன்றைய காலகட்டத்துக்கு இது போல ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
திருவிழா:
கிருஷ்ணஜெயந்தி, ராம நவமி, பிரம்மோற்சவம்
பிரார்த்தனை:
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து துளசி மாலை சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அமைவிடம்:
சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது பேளூர் கரடிப்பட்டி கிராமம்.