சேலம் :
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொட்டலங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரை 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கை களில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தூய்மைப் பணியாளர்களில் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி சித்த மருத்துவம் பிரிவு சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் சித்த மருத்துவப் பொருளான கபசுரக் குடிநீர் பொட்டலங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆணையாளர், தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த எடுத்துரைத்தார்.