சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 15ஆயிரமாகவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12000 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவர்களின் நலன் கருதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே : 22-12-2022 யில் தற்காலிகமாக காலிப்பணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வெளியிடப்பட்டது.

மேற்படி அரசாணையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆணையிட்டிருந்தார்.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பலர் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் தங்களது தொகுப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து,. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.