சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் துவங்கியுள்ள ‘அரசியல் பேரவை’, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ‘அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் சகாயம் பேசியதாவது, “அரசியல் மாற்றத்துக்கு பதில் சமூக மாற்றத்தை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய காலம் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான காலம்.
புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் எனது ‘அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் எங்களது அரசியல் பேரவை இணைந்து போட்டியிடும்.
வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அந்த இரண்டு கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்” என்றுள்ளார். ‘அரசியல் பேரவை’ சார்பில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து மாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார்.