சென்னை: தென்சென்னையில் விளம்பரங்களால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பிரபல கட்டுமான நிறுவனமானமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்தினடம் ரூ.50லட்சம் கேட்டு மிரட்டியதாக, சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தென்சென்னையின் பிரபல சாலைகளான ஈசிஆர், ஓஎம்ஆர் சாலையோரங்களில் ஏராளமான பிளக்ஸ்களை வைத்து, சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஜி ஸ்கொயர் கட்டுமான நிர்வாகி  புருஷோத்தம் குமார் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  கொடுத்திருந்தார். அவரது புகார் மனுவில், . தி.நகரில் ஸ்டால் வாட் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கெவின் உங்கள் நிறுவனம் குறித்து என்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. அனைத்தும் வில்லங்கமானவை. இதுபற்றி, பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வர உள்ளது. அதற்கு முன் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த செய்தி பிரசுரமாகி விடும். இனி செய்திகள் பிரசுரமாகாமல் இருக்க மாதம்தோறும் எனக்கு 50 லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும். மறுத்தால், தொடர்ந்து செய்தி வெளியிடப்படும் என மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஜிஸ்கொயர் நிறுவனத்தை மிரட்டிய கெவின் என்பவரை தேடினர். அவர்கள் கோவிலம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கெவினை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மிரட்டல் விடுத்தது  உறுதியானது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், “ஜிஸ்கொயர் புகாரின் அடிப்படையில் கெவின் மீது E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த Air pistol, தகவல் தொடர்பு மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக” சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழ் யூடியூபர் மாரிதாஸ், ஜூனியர் விகடன் நாளிதழ் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர், 2 ஜி  ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாஷாவின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது. இவர்மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கும் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் தொடர்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுகவுக்கு தொடர்புடையவர்களுடன் நெருக்கமாக இருப்பதால், ஜி ஸ்கொயர் நிறுவனம் அனுகூலங்களைப் பெறுவதாக ஜூனியர் விகடன் இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களை அடக்கும் முயற்சியே இதுபோன்ற கிரிமினல் வழக்குப்பதிவுகள் என்று கண்டனம் தெரிவித்துள்ள விகடன் இதழ், இதுபோன்ற மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூனியர் விகடன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.