டில்லி

பாஜக ராமர் கோவில் குடமுழுக்கை அரசியலாக்குவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டி உள்ளார்.

வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  விழாவில் கலந்து கொள்ளக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.  இதைப் போல் மற்ற தலைவர்களும் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம்,

“பாஜக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை அரசியலாக்குகிறது.  மக்கள் அனைவருக்கும் கடவுள் ராமர் சொந்தமானவர் என்றாலும் அவரை தங்களுக்குரியவராக்க பாஜக முயல்கிறது. 

பாஜக அரசால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மோடி அரசு இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

வரும் மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். சத்தீஷ்கரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்படவில்லை.  ‘இந்தியா’ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.”

என்று கூறி உள்ளார்.