பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
வரவேற்பு கிடைத்துள்ளதால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் : இதுவரை நான் படம் பார்த்துவிட்டு, பாராட்டுவதற்கு வீட்டிற்குச் சென்ற 4-வது இயக்குநர் பார்த்திபன். ‘சங்கராபரணம்’ இயக்குநர் விஸ்வநாத், ‘அரங்கேற்றம்’ இயக்குநர் பாலசந்தர், ‘புதிய வார்ப்புகள்’ இயக்குநர் பாரதிராஜா ஆகியோரைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு இயக்குநர் பார்த்திபன் வீட்டுக்குச் சென்றுள்ளேன்.
ஒரே ஒரு கதாபாத்திரம், ஒரு லொகேஷன் நம்மை ஒண்ணே முக்கால் மணி நேரம் ரசிக்க வைத்தது. கிண்டல் பண்றார், அழ வைக்கிறார், சமூகத்திலிருக்கும் வெறுப்பு என அனைத்தையுமே பண்ணியிருக்கார்.
பார்த்திபனுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை. பணம் சம்பாதிக்க வந்தேன். சம்பாதித்துவிட்டேன். உங்களுக்கு முன் நான் இயக்குநர் எனச் சொல்வதையே விரும்பவில்லை. ‘ஒத்த செருப்பு’ மாதிரி படமெடுக்க என்னால் முடியாது. அவர் அலுவலகத்துக்குச் சென்றவுடன் ஒன்று பண்ணினேன். என்னவென்றால், அவருடைய காலில் விழுந்துவிட்டேன். பார்த்திபன் சார் யூ ஆர் க்ரேட்!” என்று பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.