போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கிரிக்கெட் மைதானம் போல் மாற்றி மின்விளக்குகள் அமைத்து அங்குள்ள விவசாயிகள் 21 பேருக்கு நாள் ஒன்று 400 ரூபாய் வழங்கி தாங்கள் கூறுவது போல் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளது இந்த மோசடி கும்பல்.

விவசாயிகளை விளையாட்டு வீரர்களாக மாற்றியதுடன் அவர்களுக்கு பல்வேறு நிறங்களில் ஜெர்சியும் வழங்கியுள்ளனர், தவிர பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே போன்று மிமிக்ரி செய்யக்கூடிய ஒருவரையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ரசிகர்கள் கூச்சலிடுவது போல் ஆடியோக்களை எல்லாம் தயார் செய்து ஒரு நிஜ கிரிக்கெட் நடப்பது போல் யூ டியப் சேனலில் ஒளிபரப்பிய இந்த மோசடி கும்பல், இதன் மூலம் ரஷ்யாவில் இருந்து சூதாட்டம் மூலம் பணத்தை சுருட்டியுள்ளனர்.

ரஷ்யாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் பணிபுரிந்த ஆசிப் முகமத் என்ற நபர் இந்த மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார், ரஷ்யாவில் உள்ள டீவர், வோரோனே மற்றும் மாஸ்கோ ஆகிய மூன்று நகரங்களில் இருந்து இந்த போலி கிரிக்கெட் லீக்கிற்கு பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.

பந்தய தொகைக்கு ஏற்ப விளையாட்டு வீரர்களான விவசாயிகளுக்கு அம்பயர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கி மூலம் இந்த மோசடி கும்பல் எப்படி விளையாட வேண்டும் என்று வழிநடத்தி உள்ளது.

இதனால் பலர் தங்கள் பந்தய பணத்தை இழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இருந்தபோதும் இதற்கு மூளையாக செயல்பட்ட ஆசிப் முகமத்தை போலீசார் தேடி வருகின்றனர்.