மாஸ்கோ: கோழிக்கோடு விமான விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன் வந்த விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விமானத்தில், 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 விமானிகள் என 190 பேர் பயணித்தனர்.

விமானம் தரையிறங்கியபோது, ஓடு பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக பிளந்தது. விபத்தில் இரு விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

149 பேர் மலப்புரம், கோழிக்கோடு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு புடின் கடிதம் எழுதி உள்ளார்.