மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,   மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள குரோக்கஸ் கலையரங்கத்தில்  நேற்று (மார்ச் மாதம் 22ஆம் தேதி) மாலை ராணுவச் சீருடையுடன்  முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். இதனால் அப்பாவி மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். ஆனால், அவர்களையும் குருவிகளை சுடுவது போல பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர். இந்த துப்பாக்கி சூடு  தாக்குதல் காரணமாக கலையரங்கக் கட்டடம் தீப்பிடித்துக்கொண்டது.

வேகமாகப் பரவிய தீயின் காரணமாக அவ்விடம் எங்கும் கரும்புகை நிரம்பியதாகவும் கலையரங்கத்தில் இருந்தோர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல விரைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பதற்றநிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர். உடனடியாக தீயணைக்கப்பட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஐ தாண்டி உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்களிடையே பதற்றமும் உருவாகி உள்ளது.

இதற்கிடையில்,  இந்த துப்பாக்கி சூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய ரஷிய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,  துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் குறித்து  விசாரணை மூலம் கண்டறியப்படும் தகவல்கள் உடனுக்குடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதிகளை ரஷ்ய சிறப்புப் படை தாக்குதல்காரர்களை வலைவீசித் தேடி வருகிறது என்றும் கூறினார்.

இதற்கிடையில்,  கலையரங்கக் கட்டடத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை மோப்ப நாய்களைக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். கலையரங்கக் கட்டடத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் படங்களை ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேன் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத அமைப்பின் துப்பாக்கி சூட்டுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.