சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட  10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் 1 ஆயிரத்து 975 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குகள் அனைத்தும் , 315 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.  காலை 7 மணி வாக்குப்பெட்டிகள்  அறைக்குள் இருந்து எடுக்கப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்பதால் முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு,   4 வண்ண ஓட்டு சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும். பின்னர் அதை 50 வாக்குகள் கொண்ட கட்டாக கட்டப்பட்டு, பின்னர்தான் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னரும் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.  அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது. பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் கட்சிகள் விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.