டில்லி

நேற்று முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை ஆர் எஸ் எஸ் இயக்க துணை அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊரடங்கின் மூன்றாம் கட்டம்  இன்றுடன் முடிவடைவதையொட்டி பிரதமர் மோடி கடந்த 12 ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.  அப்போது அவர் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அது குறித்த விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவார் எனவும் தெரிவித்தார்.  அதன்படி பகுதி பகுதியாக நிர்மலா சீதாராமன் உதவி திட்டங்கள் குறித்து  தினமும் விளக்கம் அளித்து வருகிறார்

நேற்று நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தில் நாட்டின் முக்கிய 7 துறைகளைத் தனியார் மயமாக்க உள்ளதாக அறிவித்தார்.  அவை, நிலக்கரி, தாது உற்பத்தி, ராணுவத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின் விநியோகம், விண்வெளி மற்றும் அணு சக்தி ஆகியவை ஆகும்.  இதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரிவின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாய், “நிதி அமைச்சர் அளித்த அறிவிப்புகளால் நேற்றைய தினம் நாட்டுக்கு ஒரு சோக தினமாக அமைந்து விட்டது.  அரசு தொழிற்சங்கங்கள், சமூக பிரதிநிதிகள்,உள்ளிட்டோருடன்  பேச ஏனோ வெட்கம் கொள்கிறது. அரசின் யோசனைகள் பலவும் கண்டனத்துக்குரியதாக உள்ளது அரசுக்கு இதனால் தெரியாமல் போகிறது.  தனியார் மயமாக்கலுக்கு எப்போதுமே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நமது ஆட்சியாளர்களுக்குச் சீர்திருத்தம் என்றாலே தனியார் மயம் என்பதே கொள்கையாக உள்ளது. ஆனால் அது தவறு என்பதை நாம் சமீப காலமாக அனுபவித்து வருகிறோம்.  தனியார் மயமாக்கலால் வர்த்தகம் முடங்கிப் போய் அது அரசு துறைகளையும் பாதித்துள்ளது.    இந்த தனியார் மயமாக்கல் என்பது ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.

இதனால் ஊழியர்களுக்கு வேலை இன்மை, தரமற்ற பணி கிடைத்தல், ஊழியர்களைப் பயன்படுத்தி லாபம் அடைதல் என்பது பெருகி விடும்.  சமுதாயத்தில் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசு தவறான திசையில் தவறான முடிவுகள் எடுத்துள்ளன.   சமுதாய  கலந்தாய்வு என்பது ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.”  எனத் தெரிவித்துள்ளார்.