சென்னை: தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரேநாளில் ரூ.840 உயர்ந்து ரூ.53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

பெண்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறையாத நிலையில், தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது சாமானிய பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பாண்டு மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த, மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயரத்தொடங்கிய நிலையில், இந்த  ஏப்ரல் மாதம் முதலில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது. ஆனால், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும் , சவரன் ரூ.52,920க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ரூ.53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, தங்கத்தின் விலை உயரும் என்று உலக தங்கக்கவுன்சில் ஏற்கனவே எச்சரித்திருந்தது. தங்கத்தின் இறக்குமதிக்கு அதிக வரி வசூலிப்பது, தங்க கடத்தலை ஊக்குவிப்பதாகவே அமையும் என்றும்,  எனவே, இறக்குமதி வரியை குறைக்க வேண்டியது அவசியம் என கூறியது. ஆனால், இந்திய அரசு தங்கத்திற்கான வரியை உயர்த்தி உள்ள நிலையில், தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.