திருவாரூர்: வலங்கைமானில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு விற்பனைக்காக  அமைக்கப்பட்டிருந்த  பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுமார்  ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதமடைந்துள்ளதாக வறப்படுகிறது.

தமிழ்நாடு உள்பட  இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால்  கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகைகளில் தீபாவளி ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26ம் தேதி, அதாவது நவம்பர் 12ந்தேதி ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசு அனுமதி பெற்று 12 பட்டாசு உற்பத்தி கடைகள் மற்றும் 48 விற்பனை கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.  இங்குள்ள கடைகளில் இருந்து, ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு பின்புறம் உள்ள வைக்கோல் போரில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. அதிர்ஷ்டவசமாக பட்டாசு கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த  வெடிவிபத்து தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் சேதம் அடைந்தன. மேலும், பாதுகாப்பு அம்சம் இல்லாமல் பட்டாசு கடை வைக்க எப்படி காவல்துறை, தீயணைப்பு துறை அனுமதி வழங்கியது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.