சென்னை
ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ரயில்வே காவல்துறை எஸ் பி கர்ணா சிங் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,
“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாகப் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரயில் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதையோ, ரயில் பெட்டிகளில் கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆர்.பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.
ரயில்களில் பெண்கள், குழந்தைகள் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகப் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையான ரயில்களிலும் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் கிரைம் காவல்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.”
என்று அவர் கூறினார்.