சென்னை: தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக  மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதுதொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, அவரை கைது செய்ய முனைந்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், இரண்டு முறை ரெய்டும் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக, அவரை கைது செய்ய முடியாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதால்,  அரசுக்கு ரூபாய் 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக  கோவையில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து, வேலுமணி வீடு முன்பு அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். அவர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறத.