சென்னை:  அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான, கட்டுமான நிறுவனங்கள்,  ஜவுளிக்கடை உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம்  பேரக்ஸ் ரோடு அருகே உள்ள பின்னிமில்லுக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட மொத்தம் ரூ.50 கோடி  லஞ்சமாக பெற்ற தற்போதைய மற்றும் முன்னாள்  திமுக, அதிமுக, விசிக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள்மீதான புகார்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை இன்று கட்டுமான நிறுவன அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரின் சோதனைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் மண்குவாரி உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகளை நடத்தி  உள்ளனர்.. திமுகவுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் வழிகள், அதனால் ஏற்படும் முறைகேடுகள்  கண்டறியப்பட்டு அதனை அடைக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கைகள் இருப்பதாகவும், பழிவாங்கும் நோக்கில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான  கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது இல்லத்திலுல் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று  அதிகாலை முதலே சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், பிரபல தொழிலதிபர்கள் என  10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு போன்ற இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கான அடிப்படை காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பின்னிமில் இடத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்த விவகாரத்தில், ரூ.50 கோடிவரை அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்தே, இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

முன்னதாக, 18ஆயிரம் பேர் பணியாற்றி வந்த பிரபலமான பின்னிமில்  தொழிலாளர்களின் அடிக்கடி வேலைநிறுத்தம் காரணமாக நலிவை சந்தித்த நிலையில், அந்நிறுவனம் மூடப்பட்டு, பல ஆயிரம் பேர் பணியிழந்தனர். இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு எதிரான வழக்குகள் மற்றும் நஷ்ட ஈடு காரணமாக, அந்த மில்லுக்கு சொந்தமான இடங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிறுவனத்துக்கு சொந்த நிலம்   சென்னை பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் இருந்து வந்தது. இதன் மொத்த இடம்  14.16 ஏக்கா் நிலம். இந்த நிலம் கடந்த 2015-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலத்தை சென்னை தியாகராய நகரில் செயல்படும் ‘லேண்ட்மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.உதயகுமாா், பெரம்பூரில் செயல்படும் ‘கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவெட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநா்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சா்மா ஆகியோா் இணைந்து ரூ.450 கோடிக்கு வாங்கினா்.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்டுவதற்கான முயற்சியில் இரு நிறுவனத்தினரும் ஈடுபட்டனா். ஆனால் அந்த பகுதிக்கு செல்லும் சாலை குறுகலாக இருந்ததாலும், இடத்தின் அருகே ஒரு பூங்கா இருந்ததாலும், இடத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும் பணியை தொடங்குவதிலும், சிஎம்டிஏ அனுமதியை பெறுவதிலும் இடா்ப்பாடு ஏற்பட்டது.

இந்த இடா்ப்பாடுகளை நீக்கி, அங்கு கட்டடம் கட்டுவதற்கு அந்த நிறுவனத்தினா் குறுக்கு வழியை கையாண்டனா். இதற்காக அந்த நிறுவனத்தினா் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகா்களுக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.  இந்த லஞ்ச பணம் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தின் வாயில் வசதிக்காக  அந்த பகுதியில் செயல்பட்டு வந்த பொழுது போக்கு பூங்கா அகற்றப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் லேண்ட் மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக ராஜீவ்நாயுடு என்பவா்  வழக்குத் தொடா்ந்தாா். வழக்கின் விசாரணையின்போது, நீதிமன்றத்தில்,  இந்த அடுக்குமாடி கட்டிடம்  திட்டத்துக்காக ரூ.50 கோடி அரசியல்வாதிகளுக்கு  லஞ்சமமாக வழங்கப்பட்டதாக வருமானவரித் துறை சாா்பில்அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா் வருமானவரித் துறையினரின் அறிக்கையை பெற்று விசாரணையைத் தொடங்கினா்.  அப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு இரு நிறுவனத்தினரும் ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சமாக வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லேண்ட்மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.உதயகுமாா், பெரம்பூரில் செயல்படும் கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சா்மா ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குக்கான ஆதாரங்களையும்,தடயங்களையும் திரட்டும் வகையில் இரு நிறுவனங்களுக்கு சொந்தமான தியாகராயநகா்,பெரம்பூா் உள்ளிட்ட 5 இடங்களில் ஊழல் ஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை(பிப்.1)ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நீடித்த சோதனையில் வழக்குத் தொடா்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த வழக்குத் தொடா்பாக லஞ்சம் வழங்கிய இரு நிறுவனங்களின் நிா்வாகிகள், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் கட்சி பிரமுகா்கள்,அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கப்பணம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி,  அப்போது எம்.பி.யாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பாலகங்காவுக்கு ரூ.23 லட்சம், திமுகவைச் சோ்ந்த ஜவகருக்கு ரூ.33 லட்சம், எம்எல்ஏவாக இருந்த நீலகண்டனுக்கு ரூ.40 லட்சம், பெயா் குறிப்பிடப்படாத எம்பிக்கு ரூ.1.67 கோடி, திமுகவைச் சோ்ந்த பிகேஎஸ்க்கு (பி.கே.சேகர்பாபு)  ரூ.10 லட்சம், அப்போது எம்பியாக இருந்த அதிமுக வெங்கடேசனுக்கு ரூ.20 லட்சம், அந்த காலகட்டத்தில் மாமன்ற உறுப்பினராக இருந்த சரோஜாவு என்பவருக்கு  2 லட்சம் என மொத்தம்  ரூ.2 கோடியே 95 லட்சம் கைமாறி உள்ளது. மேலும், திருமாவளவனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  பெயா் குறிப்பிடப்படாத வட்டாட்சியருக்கு ரூ.2.25 லட்சம், கிராம நிா்வாக அதிகாரி சுப்பிரமணியனுக்கு ரூ.15 ஆயிரம் என   மொத்தம் 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கம் லஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் வெள்ளிக்கிழமை (பிப்.9) காலை முதல்  அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.