டில்லி:
பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் புழங்கும் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என உத்தரவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து செல்லுபடியாகும் நோட்டுகளை பெற மக்கள் அல்லாடி வருகிறார்கள்.
99
இந்த நிலையில், “பிரதமர் மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி, ரூ100, ரூ50 நோட்டுக்களையும் செல்லாது என அறிவிக்கப்போகிறார்” என்று ஒருதகவல் பரவி வருகிறது. இதனால்  மக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு, நேற்று விளக்கம் அளித்துள்ளது.
“ரூ.50, ரூ.100 நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கும் எந்தவித எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை. இது போல் பரவும் தகவல்களில் எந்தவித ஆதாரமும் இல்லை.
அதே போல வங்கி லாக்கர்கள், தங்கம், வைர நகைகளை முடக்கும் எண்ணமும் அரசுக்கு  இல்லை.
ரூ.2000 நோட்டுகள், சரியான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.   தரத்துடன் ‘இன்டாலிகோ பிரின்டிங்’ முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோட்டில் மைக்ரோ சிப் ஏதும் இல்லை.
மேலும், கருப்பு பணத்தை தடுக்கும் வகையில், பினாமி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.