டில்லி:
தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று  பாராளுமன்ற மேல்–சபையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
கடன் தள்ளுபடி என தகவல்
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று, திரும்ப செலுத்த மனமில்லாத பெரும்கோடீசுவரர்களின்  ஏழு ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தகவல் வெளியானது. .
இதில் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தாமல், நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்ட தொழில்திபர் விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடியும் அடங்கும் என தகவல் வெளியானது
இந்த விவகாரம் நாடாளுமன்ற மேல்–சபையில் எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி  ‘‘ரூ.7 ஆயிரம் கோடி வராக்கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?’’ என்று கேள்வி எழுப்பினார்.

விஜய் மல்லையா - அருண் ஜெட்லி
விஜய் மல்லையா – அருண் ஜெட்லி

அப்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி ‘‘ரிட்டன் ஆப் என்ற வார்த்தைக்கு அர்த்தம், தள்ளுபடி என்பது அல்ல. இது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. ரைட்–ஆப் (பதிவு அழித்தல்) என்பதை அப்படியே பொருள் எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த அர்த்தத்தில் கூறப்படவில்லை. ரைட்–ஆப் என்பது கடன் தள்ளுபடி அல்ல. கடன் இன்னும் தொடர்கிறது. கடனாளிகளை அரசு பின்தொடர்கிறது’’ என்று தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் இதை உறுதி செய்தார். அவர், ‘‘விஜய் மல்லையா உள்ளிட்டவர்களின் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள்  வேறு ஒரு தலைப்பில் கடன்களாக வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வசூலிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தக் கடன்கள் ‘வசூலின் கீழான கணக்குகள்’ என வைக்கப்படும். கடனாளிகளை விட்டு விடமாட்டோம். கடனை முழுமையாக வசூலிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.