கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Must read

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொரோனா முதல் அலையை விட 2-வது அலையின் தாக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அநாதையாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என தர தரப்பில் இருந்து மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து,  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி,  பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிவாரண உதவிகள் தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.

குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவு அடைந்தவுடன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வட்டியுடன் அந்த பணம் கிடைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article