சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது,  ஆட்சியாளர்கள்  நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை முற்றிலும் புறக்கணிப்பதாகவும்  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்  துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதி அமைச்சரும்,  துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் கடன் தற்போது அதிகரித்துள்ளதாக கூறியதுடன் சபையில் அமளி ஏற்பட்டது.  இதனைத்தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன்,  அரசு கஜானாவை காலி செய்வதில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர்.  கடந்த 2011ம் ஆண்டு  திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. இன்று (பிப்.23) நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கும் போதே ரூ. 5.7 லட்சம் கோடி கடன்  என்று கூறுகிறார்.  இது, ஆட்சியாளர்களின் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்,  டெண்டர்களை விட்டு வருமானத்தை ஈட்டுவதே  நிர்வாகமாக திகழ்கிறது. பழனிசாமி விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 40 ஆயிரம் டெண்டர்கள் விட்டு அரசின் கஜானாவை காலி செய்து உள்ளார்.

மக்களின் ஆதரவுடன் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி மேலாண்மையை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம்.

தற்போது, இந்த சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் திமுக புறக்கணிப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.