சென்னை: தலைநகர் சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள்  உள்பட மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பொருட்களை, அதன் உரிமையாளர்களிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் ஏராளமான திருட்டுக்கள், வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்மீதான புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, திருடப்பட்ட பொருட்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அதன்படி,  சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் திருடுபோன 1,463 மொபைல் போன்கள், 183 இரு சக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள் மற்றும் 46 கார்கள், 2,419.72 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதை நேற்று உரியவர்கடளிடம் ஒப்படைத்தனர்.

இதற்காக சென்னை ழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்கு  கைப்பற்றப்பட்ட திருடு போன பொருட்களை காட்சிக்கு வைத்த காவல்துறையினர், அதனை உரியவர்களிடம்  ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், உரியவர்களிடம்  ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசிய சங்கர் ஜிவால், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்காக மாநகர் முழுதும் 10 ஆயிரம் போலீசாருக்கு இரண்டு ‘ஷிப்டு’களாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது. ஓட்டல்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றவர், திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றை  தடுக்க சென்னையில் புதிதாக நான்கு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் விரைவில் திறக்கப்படும் என்றார்.