டில்லி,

கூடங்குளம் அணு மின் உலைகள் அமைப்பதில் ஏற்பட்ட  தாமதம் காரணமாக  ரூ.449 கோடி இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியம்  அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

ஆண்டுதோறும், நாட்டின் வளர்ச்சி மற்றும் இழப்பு குறித்து மத்திய கணக்கு தணிக்கை வாரியம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் உலைகளை அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கூடுதலாக 449 கோடி ரூபாய் வட்டியாக செலுத்த நேரிட்டதாகநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

மத்திய கணக்கு தணிக்கை வாரியம்,   கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கான செலவின கணக்கு குறித்து ஆய்வு செய்தது. அதன்  தணிக்கை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், முதல் மற்றும் இரண்டாவது உலைகள் அமைக்க கூடுதல் காலம் எடுத்துக்கொண்டதால் 449 கோடி ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாகவும், ஆனால், அந்த இழப்பை ஈடுகட்ட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறி உள்ளது.

மேலும், இது தொடர்பாக தனியார் வங்கியான   எச்.டி.எப்.சி வங்கியில் 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதி மீறல் நடந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு உலைகள் அமைக்க தாமதமே இவ்வளவு பெரிய இழப்பு காரணம் என்றும்,  முதல் உலை அமைக்க 7 ஆண்டுகளும், இரண்டாவது உலை அமைக்க 9 ஆண்டுகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குறைபாடுள்ள பொருட்கள் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அணுஉலை அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அணு உலை அமைப்பதில் சில ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.