விருதுநகர்: ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜராகி உள்ளார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் முன்ஜாமின் கோரிய அவரது மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. சுமார் 2 வாரங்களுக்கு பிறகு அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணை நடத்திய அவருக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அப்போது தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், விருதுநகரில் பதியப்பட்ட புகாருக்கு அவரை ஏன் திருச்சி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் சிறைகள் நிரம்பி வழிகிறதா? அவ்வளவு கைதிகள் உள்ளனரா. கைதிகளை விடுவிக்க கூறி உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும் என் தமிழக அரசு அந்த நடைமுறையை பின்பற்ற வில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி புகார் பதியப்பட்ட காவல் நிலைய பகுதியை விட்டு வெளியூர் செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்டை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம். அவருக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜராகி உள்ளார்.