சென்னை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய வாகனச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில், இதுவரை சரியான முறையில் அமல்படுத்தாத நிலையில், மத்தியஅரசின் அறிவுறுத்தல்படி விரைவில் புதிய வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, 18வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டினால், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1, 2019 முதல் புதிய வாகன சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,  வாகன கட்டணங்கள், காப்பீடு கட்டணங்கள், விதி மீறல்களுக்கான அபராதத் தொகைகள் போன்றவை  பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில், பல மாநிலங்களில் அபராத தொகையை பாதியாக குறைத்து உத்தர விட்டன. ஆனால், தமிழகத்தில் புதிய வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்படாமல் பழைய விதிகள் படியே வாகன அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன அபராத சட்டங்களின்படி இதுவரை பதிவு செய்த விதி மீறல்கள் தொடர்பாக தமிழக அரசு 17 கோடிகளை அபராதமாக வசூலித்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு வசூல் செய்துள்ளது வெறும் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மட்டுமே.

சாலை விதிகளை மதிக்காதவர்களிடம் சட்டத்தின்படி, கடுமை காட்டாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் கட்டணத்தை கணிசமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

18 வயது நிரம்பாத சிறார்களுக்கு வாகனங்களை யாராவது கொடுத்து விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். மேலும், வாகனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும்.. இதை தமிழக அரசு கடுமையாக அமல்படுத்த ஆரம்பித்தால் பள்ளிகளுக்கு டூவீலரை ஓட்டிச் செல்லும் மாணவ-மாணவியர் இனி அவ்வாறு செய்ய முடியாது.

வாகன சட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு பல மடங்கு அபராத கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு முடிவு செய்து  விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரையில் உயர்த்தி  அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி,  ஹெல்மெட் அணியாமல் இரு சக்கரம் வாகனம் ஓட்டினால், ரூ 1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் இதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே  மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல புதிய வாகனச்சட்டத்தின்படி, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகஅரசு குறைந்த பட்ச அபராதமே வசூலித்து வருகிறது.  இதன் காரணமாக, வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதால், அபராத கட்டணத்தை புதிய சட்டத்திருத்தத்தின்படியே வசூலிக்க தமிழகஅரசுக்கு உத்தரவிடப்படுட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன….

இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியரிடம் டூவீலர் வாகனங்களை கொடுத்து அனுப்பும் பெற்றோர்கள் பாடு இனி சிரமம்தான்….. பெற்றோர்களே எச்சரிக்கை….