சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் குடிமகன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், தமிழ்நாடு குடிகார மாநிலமாக மாறி வருவதும் உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில்,   2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை, 2021 – 2022ம் நிதியாண்டில் ரூ. 36,050 கோடியும், 2022 – 2023ம் நிதியாண்டில் ரூ.44,121 கோடியும், 2023 – 2024ம் நிதியாண்டில் ரூ.45,855 கோடியும், 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இதன்படி 2023 – 2024ம் நிதியாண்டை விட, 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.2489 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 இலட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 – 2025 ஆம் ஆண்டில் (31 மார்ச் 2025 வரை), மற்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், பிற நாடுகளுக்கு 21,80,465 பெட்டிகள் (cases) பீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.777.07 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இணைய வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திராவிட ஆட்சியாளர்கள், ஒவ்வொரு முறை தேர்தலின்போது, டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக கூறி, வாக்கினை பெற்று ஆட்சியை பிடித்ததும், தங்களது உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு வருகின்றன. இளைய தலைமுறையினரையும் குடிகாரனாக்கி வரும் டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கு பதிலாக, வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அதிக அளவில் கடைகளை திறந்து, மக்களை குடிகாரர்களாக்கி கல்லா கட்டி வருகின்றன.

இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை என்று கூறி மக்களை மடைமாற்றும் தமிழ்நாடு அரசு,  மற்றொரு புறம் மக்களிடையே டாஸ்மாக் எனப்படும் சாராய திணிப்பை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.  அரசின் வருமானம் ஒன்றையே குறிக்காளாக கொண்டு, தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களால், மக்களிடையே #சாராய திணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், மாநிலத்தின்  பாதி மக்கள் குடிகாரர்களாக மாறி உள்ளனர். இல்லை இல்லை, அரசு அவர்களை குடிகாரர்களாக மாற்றி இருக்கிறது என்பதே உண்மை.  இதன் காரணமாக, மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி,   பாலியல்  அத்துமீறல்களுக்கும், வன்புணர்களும் அதிகரித்து,  பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் உருவாகி உள்ளது, இன்று  பள்ளி சிறுவர்களே போதைக்கு அடிமையாக இருப்பதை காண முடிகிறது. இதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை