டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்  இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வமின்மை, முறையான திட்டமிடல் இல்லாத காரணமாக, தடுப்பூசிகள் காலாவதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் 200 மில்லியன் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா எனும் பெருந்தொற்று இந்தியா உள்பட உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. இருந்தாலும், இந்தியா உள்பட பல நாடுகள், அதை தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயாரித்து வெற்றி கண்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும் வரவற்பை பெற்றன. இந்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்ட வந்த நிலையில், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் 218 கோடி டோஸ்களுக்கும் மேல் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது,  2,18,84,20,182 (79,366 ) டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளது. இதனால்,  தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், இரு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு முன் எச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை மட்டுமே.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தாலும், ஏராளமானோர் அதை எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. மேலும், பல மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் அதிக அகற்றை காட்டாதது, சரியான திட்டமிடல் இல்லாத காரணங்களால் கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசி மருந்துகள் வீணடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர்  மாதம் இறுதி வரை சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 என்று வைத்துக்கொண்டால் வீணான தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2,250 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவசர கால நோக்கில், இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதால், அது வீணாவதை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் த 2-ந் தேதி நிலவரப்படி, மாநிலங்களில் சுமார் 21.9 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதுபோல இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் எடுக்க முன்வரவில்லை. இதனால் தடுப்பூசி மருந்துகள் வீணாவதை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதுதொடர்பாக  தடுப்பூசி தயாரித்து வந்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில்,  கடந்த ஜூன்-ஜூலையில் சுமார் 200 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகி விட்டது., “நாங்கள் 2021-ம் ஆண்டு இறுதியில் ஒரு மாதத்திற்கு 250 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். ஏற்றுமதி சந்தைகளில் கூட தேவையில்லாததால் திடீரென்று உற்பத்தியை நிறுத்த வேண்டி இருந்தது. இதனால் ஏற்கனவே மொத்தமாக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். இல்லை என்றால்  மேலும் காலாவதி ஆகிவிடும் என்று கூறியதுடன், கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காலாவதி ஆகும் டோஸ்களை பெற்று வருகிறோம் என்றவர்,  இனி ஒவ்வொரு மாதமும் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் டோஸ்கள் வரை காலாவதி ஆகிவிடும் என்றார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டோஸ்கள் காலாவதி ஆகிவிடும்” என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.