சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 1000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் குளிர்சாதன பேருந்து நீங்கலாக மற்ற பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்.

சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் சுமார் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3500க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளை தினசரி வழங்கி வருகிறது இதில் சுமார் 15 முதல் 20 சதவீத பேருந்துகள் குளிர் சாதன பேருந்துகள் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் குளிர் சாதன பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 2000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் இன்று முதல் வழங்கப்படுவதை அடுத்து ஏ.சி. பஸ் அதிகம் ஓடும் வழித்தடங்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில், வெளியூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு வேலைக்காக வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் ஒரு நாள் பயண அட்டையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்படாததால் பலரும் கவலையில் உள்ளனர்.

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய நிலையில் கிளம்பாக்கம் வரை செல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் குறித்த சதவீத பேருந்துகள் அடையாறு மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் நிலையில் இது வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஆனால், மத்திய சென்னையின் அடையாளமாக இருந்த கோயம்பேடு பேருந்து முனையத்தில் தென் மாவட்ட பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின் பேருந்து நிலையம் பொலிவற்று காணப்படுவதுடன் மத்திய சென்னை மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய தினசரி (ஒன் டே பாஸ்) பாஸை மீண்டும் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகர பேருந்து பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய குறித்த பேருந்து நிலையத்தில் ஏறி குறித்த நிலையத்தில் இறங்கும் மாதாந்திர சீசன் பாஸ் தவிர, தினசரி (ஒன் டே பாஸ்), வாராந்திர பயண அட்டை மற்றும் மாதாந்திர பயண அட்டை என பல்வேறு விதமான பயண அட்டைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2018ம் ஆண்டு முதல் தினசரி (ஒன் டே பாஸ்) மற்றும் வாராந்திர பயண அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.